திருவெறும்பூர்: ரசீது எடுப்பதில் சிரமம்; பத்திரம் பதிய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்!

க.சண்முகவடிவேல்

திருவெறும்பூர் அருகே உள்ள வின்நகரில், திருவெறும்பூர் சார் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு திருவெறும்பூர் வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதியப்படுவது வழக்கம். இந் நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பலரும் பல்வேறு பதிவுகளை செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் இன்று காலை 10 மணியில் இருந்து பத்திரங்கள் எதுவும் பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்த பொதுமக்கள் பத்திரங்கள் உள்ளிட்ட பதிவுகளை பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, பதிவு கட்டணம் எஸ்பிஐ வங்கி மூலம் நெட்பேங்கிங் வழியாக பொதுமக்கள் பத்திரப்பதிவு கட்டணம், கணினி கட்டணம், சப்டிவிஷன் கட்டணம், குறுந்தகடு கட்டணம், குறைவு முத்திரை தீர்வை கட்டணம், ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். அதற்கான ரசீது வெளியான பிறகுதான் அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அவர்களுக்கு பதிவு செய்து தரப்படும். தற்பொழுது ரசீது எடுக்கமுடியாமல் பத்திரம் பதிய முடியவில்லை என்று கூறினார்.

இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்; நாங்கள் நிலம், மனை, வீடு, ஆகியவற்றை வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டு நல்ல நேரம் பார்த்து இதனை வாங்க விற்க பதிவு செய்வதற்கு இங்கு வந்தால் இது மாதிரியான பிரச்சினைகளால் எங்களுக்கு மன உளைச்சலும், பண விரயமும், நேர விரயமும் ஏற்படுகின்றது என்று புலம்பினர்.

திருவெறும்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யவும், திருமணங்கள் பதிவு செய்யவும் வந்தவர்கள் என்ன செய்வது எனத்தெரியாமல் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பலமணி நேரமாக பரபரப்பு காணப்படுகின்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.