சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி 13.62 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மேற்கு வங்காள வீராங்கனை மொமிதா மொண்டல் (13.86 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை தபிதா (14.09 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மராட்டிய வீரர் சித்தாந்த் உமானந்தா திங்கலியா (13.93 வினாடி) முதலிடமும், தமிழக வீரர் சுரேந்தர் (14.18 வினாடி) 2-வது இடமும், பஞ்சாப் வீரர் தருண்தீப் சிங் (14.21 வினாடி) 3-வது இடமும் பிடித்தனர். உயரம் தாண்டுதலில் மராட்டிய வீரர் சர்வேஷ் அனில் ((2.24 மீட்டர்) தங்கப்பதக்கமும், கர்நாடக வீரர் ஜெஸ்சி சந்தேஷ் (2.21 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீரர் பாரதி விஸ்வநாதன் (2.18 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.