புதுடெல்லி: வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தடை விதிப்பது உட்பட 6 முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறதது. இதற்காக, கடந்தாண்டு டிசம்பரில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு 6 முக்கிய சீர்திருத்த திட்டங்களை கடிதம் மூலம் பரிந்துரைத்துள்ளது. அதில், தகுதியுடையவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய நான்கு கட்ஆப் தேதிகள் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்து, அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் நன்கொடை படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29(அ) விதிகளின் கீழ் வருகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே, அந்த சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடைசெய்யும் முன்மொழிவுகளை மறுஆய்வு செய்யவும், வேட்பாளர் போட்டியிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.