கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இன்று காலை மசினகுடியில் இருந்து ஊட்டியை நோக்கி கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணித்துள்ளனர். 4வது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் சென்றுக் கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்துள்ளது. உடனடியாக காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கியுள்ளனர். அப்பொது, கார் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமானது.
இது குறித்து பேசிய சுற்றுலா பயணிகள், “பெங்களூருவில் இருந்து இந்தக் காரை வாடகைக்கு எடுத்து வந்தோம். மலைப் பாதை என்பதால் காரின் என்ஜின் அளவுக்கு அதிகமாக சூடாகியிருக்கிறது. திடீரென தீப்பிடித்து எரிந்துவிட்டது. சுமார் ஒரு மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை நல்லவேளையாக காரில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டோம்” என்றனர்.