பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையானது. இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்டவைகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து, பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் போரட்டம் தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்னிப்புக் கேட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்களின் மோசமான காட்சியைப் பற்றி ‘மதச்சார்பற்ற தாராளவாதிகள்’ என்று அழைக்கப்படுபவர்களின் மவுனம் நிச்சயமாக காது கேளாத தன்மையை போன்றது.” என்று பதிவிட்டுள்ளார்.
உலக அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.