துபாய்: நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக குவைத்தில் போராட்டம் செய்த வெளிநாட்டினரை அந்நாட்டு அரசு கைது செய்து நாடு கடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. பாஜக நிர்வாகியாக இருந்த நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கியது. கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுவில் கருத்துகளை தெரிவிக்கும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக அறிவுறுத்தியது.
இந்தநிலையில் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குவைத்தில் வெள்ளிக்கிழமை அன்று பஹாகில் என்ற பகுதியில் தொழுகைக்கு பின் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் அங்கு இருக்கும் வெளிநாட்டவர்கள் மூலம் நடத்தப்பட்டது. வேலைக்காக குவைத்தில் தங்கி இருக்கும் மற்ற நாட்டினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த போராட்டத்திற்கு எதிராக முன்பே குவைத் அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அங்கு போராட்டம் நடத்த கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அதை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதில் கலந்து கொண்டவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
குவைத் விதிகளின்படி, வெளிநாட்டினர், அங்கு வேலை செய்யும் பிற நாட்டினர் போராட்டங்களை மேற்கொள்ள கூடாது. அப்படி மேற்கொண்டால் அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு உடனே அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அதன்படியே அங்கு போராட்டம் செய்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தில் வெளிநாட்டவர்களின் உள்ளிருப்புப் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற சட்டங்களை மீறியதால் அவர்கள் குவைத்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்று குவைத் அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த பஹாகில் பகுதியில் இருந்து வெளிநாட்டவர்களை கைது செய்து அழைத்து வருமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும், அவர்களைக் கைது செய்து நாடு கடத்தும் மையத்திற்கு அனுப்பும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அரப் டைம்ஸ் கூறியுள்ளது. அவர்கள் குவைத்துக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் குவைத் சட்டங்களை மதிக்க வேண்டும், எந்த வகையான ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு இருந்தன.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குவைத்திடம் இந்தியா முன்னதாக தெரிவித்திருந்தது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், மற்றும் தூதர் சிபி ஜார்ஜ் குவைத் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
குவைத்தில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அதில் ‘‘இந்தியாவில் உள்ள தனிநபர்கள் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததால் அவர்கள் மீது ஏற்கெனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், எந்தவொரு மத ஆளுமையையும் அவமதிக்கும் வகையில் அல்லது எந்த மதத்தையும் அல்லது பிரிவினரையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவதை ஏற்க முடியாது.இதனை இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.’’ என தெரிவித்து இருந்தனர்.