காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை `சத்யாகிரக பேரணி’ நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுத்தது டெல்லி காவல்துறை.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இன்று காலை ராகுல் காந்தி நேரில் ஆஜராக உள்ளார். ராகுல்காந்தி ஆஜராகும்போது நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி தலைநகர் டெல்லியில் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் ஏபிஜே அப்துல் கலாம் சாலையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சத்யாகிரக பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதையும் படிங்க… நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்: காங்கிரஸ் முடிவு!
இதற்காக அனுமதி கோரி டெல்லி காவல்துறையிடம் கடிதம் முன்வைத்திருந்த நிலையில், டெல்லி காவல்துறை பேரணி நடத்த அனுமதி மறுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் திரளாக பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுவதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு டெல்லி காவல்துறை இணை ஆணையர் அம்ருத்தா குலோத் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இன்று காலை திட்டமிட்டபடி பேரணி நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
– விக்னேஷ் முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM