காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி , சோனியா காந்தி ஆகியோருக்குச் சொந்தமான யங் இந்தியா கம்பெனியால், நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தி இன்று டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அதேசமயம், ராகுல் காந்திக்கு எதிரான இந்த விசாரணையைக் கண்டித்து, டெல்லி உட்பட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடையே பேசிய பூபேஷ், “போராட்டம் நடத்துவதென்பது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமை. ஆனால், பா.ஜ.க எதிர்க்கட்சிகளை நசுக்க முயற்சிக்கிறது. இங்கு நாட்டின் எந்த சட்டமும் பின்பற்றப்படவில்லை. பா.ஜ.க தலைமையிலான இந்த மத்திய அரசு சர்வாதிகாரத்தை மட்டுமே பின்பற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை, மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.
ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் இந்த விவகாரத்தில் பொய்யாகச் சிக்கியுள்ளனர். மேலும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் காங்கிரஸ் தலைவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். டெல்லி காவல்துறை எவ்வளவு தடுத்தாலும், எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் உண்மை வெல்லும்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராட்டம் நடத்தவில்லை. காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளைப் பாதுகாக்கவே டெல்லியில் போராட்டம் நடத்துகிறது” என காங்கிரஸை சாடியிருக்கிறார்.