புனே: புனேயில் பழைய பொருட்கள் வியாபாரியிடம் இருந்து 1,105 துப்பாக்கி குண்டுகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் குருவார் பெத் பகுதியில் ஸ்கிராப் டீலர் (பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி) தினேஷ் குமார் (34) என்பவரிடம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதாக குற்றப்பிரிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்கிராப் டீலரின் இருப்பிடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் என்பவர், பல ஆண்டுகளாக புனேவில் வசித்து வருகிறார். இவர் ஸ்கிராப் பொருட்களை வாங்கி விற்று வருகிறார். இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி புல்லட் வைத்து இருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து 1,105 துப்பாக்கி புல்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1.56 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது ஆயுத தடுப்புச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறோம்.