உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரஷ்ய இளம் பெண்கள் 20 பேர்கள் கைது செய்யப்பட்டு ஆடை களைந்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரஷ்ய பொலிசாரால் கைது செய்யப்பட்டு கமெராவுக்கு முன்பு ஆடை களைந்து அவமானப்படுத்தப்பட்ட 20 பெண்களும் 18 முதல் 27 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து Nizhny Novgorod நகரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சுற்றிவளைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பெண் பொலிசார், கடுமையாக திட்டியதுடன் ஆடைகளை களையவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, சம்பவத்தின் போது ஆண் காவலர்களும் கடந்து சென்றுள்ளதுடன், கண்காணிப்பு கமெராவும் இயக்கத்தில் இருந்துள்ளது.
குறித்த போராட்டத்தில் கைதான ஆண்களை பொலிசார் துன்புறுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது பெண்களை அவமானப்படுத்தும் செயல் எனவும், போராட்டங்களில் பெண்கள் ஈடுபடாமல் இருக்க விடுக்கப்படும் எச்சரிக்கை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான பெண்களை ஆடை களைந்து முழு உடல் சோதனையும் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சோதனைகள் அனைத்தும் கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆண் காவலர்களும் பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான முதல் நாள் மட்டுமின்றி இரண்டாவது நாளும் இதே நிலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், பட்ட அவமானத்திற்கு இழப்பீடாக தலா 1,700 பவுண்டுகள் கேட்டு முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.