பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி நடப்பதாகவும், அதில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் பெங்களூரு போலீஸார் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 35 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் சகோதரர் சித்தாந்த் கபூரும் அடங்கும். இதையடுத்து சித்தாந்த் கபூரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் இன்று கோர்டில் ஆஜர்படுத்தப்படுவார்.
நடிகை ஸ்ரத்தா கபூர் சகோதரர் போதைப்பொருள் பயன்படுத்தி கைது செய்யப்பட்டு இருப்பதை பெங்களூரு போலீஸாரும் உறுதிபடுத்தி இருக்கின்றனர். பிடிபட்ட ஆறு பேரும் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தினரா அல்லது பார்ட்டிக்கு வரும் முன்பாக போதைப்பொருள் பயன்படுத்தினரா என்ற விபரம் உறுதியாக தெரியவில்லை. அவர்கள் அனைவரும் விசாரணைக்காக பெங்களூருவில் உள்ள உல்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சித்தாந்த் கபூர் பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக ஷூட் அவுட் வடாலா, ஹசீனா பார்க்கர் போன்ற படங்களில் நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜபுட் தற்கொலை செய்து கொண்ட போது, போதைப்பொருள் பயன்படுத்தியதால்தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடிகை ஸ்ரத்தா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான் போன்ற நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சுஷாந்த் சிங் காதலியாக கருதப்படும் ரியா, அவரின் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.