உக்ரைன் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க்கின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 100 நாட்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.
தலைநகர் கீவை கைப்பற்றும் திட்டம் நிறைவேறாமல் போன நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் உக்ரைனின் உற்பத்தி மையமாக திகழும் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகரின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துவிட்டன. இருப்பினும் அங்குள்ள மிகப்பெரிய ரசாயன ஆலை உக்ரைன் படை வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த ஆலையில் ஏராளமான பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஆலையை கைப்பற்ற ரஷ்ய படைகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.
நேற்று அந்த ஆலையின் மீது ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
இதில் ஆலையில் பெரிய அளவில் தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கிழக்கு உக்ரைனை கைப்பற்ற முயலும் ரஷிய படைகளை உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு தடுத்து வருவதாகவும், இதன் மூலம் ரஷிய படைகளின் எதிர்பார்ப்பை உக்ரைன் வீரர்கள் முறியடித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.