வாஷிங்டன் : அமெரிக்காவில், சிறுமியின் தலையில் இருந்த பேன்கள் கடித்ததால், தொற்று மற்றும் ரத்த சோகை ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் வசித்த ஒரு சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாய் சான்ட்ரா தன் காதலருடன் வேறு வீட்டில் வசித்தார். பாட்டி எலிசபெத் தன் பேத்தியை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
ஆனாலும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், சிறுமியை வீட்டிலேயே அடைத்து வைத்தனர்.சிறுமியின் தலையில் அதிகளவில் பேன்கள் இருந்ததால், ஆங்காங்கே காயம் ஏற்பட்டு, தொற்றும் ஏற்பட்டுள்ளது. இது, தலையில் மட்டுமின்றி முகத்திலும் பரவியது. முகம் வீங்கிய நிலையில் ரத்த வாந்தி எடுத்து, சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் மரணம் பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தலையில் இருந்த அதிகளவு பேன்களால் தொற்று ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.இதையடுத்து, தாய் சான்ட்ரா, பாட்டி எலிசபெத் இருவர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement