அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த 9 வயதான சிறுமி ஒருவருக்கு பிறப்பிலேயே ரத்த சோகை இருந்துள்ளது. இதனால் அச்சிறுமி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சிறுமிக்கு பேன் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறுமியை மருத்துவரிடம் அவரது தாயார் அழைத்து செல்லவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
தலை முழுக்க பேன் நிரம்பி வழிந்த காரணத்தால், அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் சிறுமிக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வாயை சுத்தம் செய்யும் மவுத்வாஷ் கொண்டு பேனை அகற்றும் முயற்சியில் சிறுமி ஈடுபட்டதாக அவரது சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், காயங்கள் மூலம் தொற்று ஏற்பட்டு, அது முகத்திலும் பரவியுள்ளது. ஒருகட்டத்தில் முகம் மிகவும் மோசமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சிறுமி இவ்வளவு பாதிப்புக்கு உள்ளான போதும், அவரது தாயார் சாண்ட்ரா கிரேகோவிச் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. அதேபோல், அவரது பாட்டி எலிசபெத் கிரேகோவிச்சும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இந்த நிலையில், முகம் முழுவதும் தொற்று பரவிய அச்சிறுமி சமீபத்தில் ரத்த வாந்தி எடுத்து வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
மரண தண்டனையை ஒழித்த மலேசியா!
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், தலையில் பேன் தொல்லையால் ஏற்பட்ட தொற்றுடன் தொடர்புடைய இரத்த சோகையால் சிறுமி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமிக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பது தெரிந்தும் அவரது தாயாரும், பாட்டியும் மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் தாய் தனது ஆண் நண்பருடன் இதுபற்றி வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அவரது ஆண் நண்பர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்திய போது, சிறுமியை மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்து செல்லவில்லை. அதேபோல், பாட்டியும் தனது மகளும், சிறுமியின் தாயுமான சாண்ட்ராவிடம் இதுபற்றி சாட்டிங் செய்துள்ளார்.
இதன் மூலம், அம்மா, பாட்டி இருவரும் சிறுமியின் பாதிப்பு பற்றிய விஷயம் தெரிந்தும் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில், அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.