சென்னை: மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். மேலும், கர்நாடக அரசு மேகதாது அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது விதிமுறை மீறலாகும். ஆணையத்தின் இந்த முடிவு காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும். எனவே மேகதாது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டப்படும். காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும்” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.