இன்று ரத்த தான தினத்தை முன்னிட்டு கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் ‘Kamal’s Blood Commune’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் இயங்கிவரும் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை ‘Kamal’s Blood Commune’ மூலம் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் கிடைக்க உதவ இருக்கிறது இந்த அமைப்பு. இதன் துவக்க விழாவான இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் “40 ஆண்டுகளாக பல விஷயங்களை செய்து வருகிறேன். எனது படத்திலும் ரத்த தானம் பற்றி முடிந்தவரை பேசியிருக்கிறேன். இதுபோல ரத்த தானம் செய்யும்போது சாதி மதம் எல்லாம் கடந்து விடுவோம். நம் உடலில் இருந்து இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதன் மூலம் நாமும் சிபிச் சக்கரவர்த்தியாக மாறலாம். அதற்கான சாத்தியத்தை விஞ்ஞானம் வழங்கியிருக்கிறது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ரத்த தானம் என்பது வெறும் ஆரம்பம் மட்டும்தான். முன்பே ஆரம்பக் கல்வியை நாம் கையில் எடுத்தால் என்ன? என்ற யோசனையெல்லாம் வந்திருக்கிறது. அரசு ஒருபுறம் அதற்கான விஷயங்களை செய்கிறது. கல்வியை நடிகர்களும் மாணவர்களுக்கு சொல்லித்தரலாம், அது ரத்த தானத்தை விட சிறந்ததாக இருக்கும். கூடவே அது இன்றைக்கும் தேவையான திட்டமாக இருக்கிறது. இது போன்றவற்றை செய்வதே எங்கள் அரசியல். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த ரத்த தான முகாமை நாங்கள் ஆரம்பித்ததன் காரணமே, இங்கு பல மருத்துவமனைகளில் அதை வியாபாராமாக செய்து கொண்டிருந்தனர். அதை மீறி நானும் என் தம்பிகளும் ரத்த தானத்தை ஆரம்பித்ததன் விளைவு, இதுவரை நான்கு லட்சம் லிட்டர் ரத்தத்தை தானமாக வழங்கியிருக்கிறோம். அதை நாங்கள் மற்ற வியாபாரிகளிடம் விற்றிருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. எது வியாபாரம், எது கடமை என்பதைப் இங்கிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது கடமை, நாளைய தலைமுறைக்காக நாம் செய்ய வேண்டியது” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM