> நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்தது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறை அலுவலக முற்றுகை போராட்டம் மேற்கொண்ட நிலையில், வழிநெடுக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மோடி அரசு பழிவாங்கல் நடவடிக்கையாக, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியாக மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவிவிடுகிறது என்றும், இது கோழைத்தனமான செயல் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணியானது, விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்றும், காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகவே இந்தப் பேரணியை நடத்தி உள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். | விரிவாக வாசிக்க > அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜர்: பேரணியாக சென்ற தலைவர்கள், தொண்டர்கள் தடுத்து நிறுத்தம்
> குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், சரத் பவார் அதனை ஏற்கத் தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் சரத் பவார் போட்டியிட்டால், அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. | விரிவாக வாசிக்க > குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்; போட்டியிட சரத் பவார் தயக்கம்?
> மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 17 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதற்கு தற்போது ஆளுநர், வேந்தராக செயல்படுகிறார். இதனை மாற்றி தற்போது சட்டம் கொண்டு வரப்படுகிறது. | விரிவாக வாசிக்க > பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜி: மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
> சென்னை – கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கைதி ராஜசேகர் மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கின் விசாரணை, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேவேளையில், குற்றப் பின்னணி கொண்ட கைதி ராஜசேகரை மூன்று முறை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும், அவர் திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இறந்துவிட்டதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாகவதாகவும், இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை தொடரும் சம்பவங்கள் நிரூபித்துவிட்டன என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த லாக் அப் மரணங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். | விரிவாக வாசிக்க > “திடீர் உடல்நல பாதிப்பு… 3 முறை மருத்துவமனை அழைத்துச் சென்றோம்” – கைதி ராஜசேகர் மரணம் குறித்து சென்னை காவல் துறை விளக்கம்
> வரும் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், இது தொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதியுள்ளார். | விரிவாக வாசிக்க > “மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் விவாதிக்க கூடாது” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
> கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு துள்ளிக் குதித்து வரும் பிள்ளைகளை கனிவுடன் வரவேற்று, அரவணைப்புடன் பாடம் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக அவர், வகுப்பில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் ஒருவர் தமிழ்ப் பாடம் நடத்துவதை கவனித்தார். | விரிவாக வாசிக்க > திடீர் ஆய்வின்போது பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் வகுப்பை கவனித்த முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு மக்கள் எதிர்கட்சி அந்தஸ்து அளித்துள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாஜகதான் என்றும், பாஜகவை திமுகவினர் செயல்பட வைக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > “தமிழகத்தில் பாஜகதான் கருத்தியல் அடிப்படையில் செயல்படும் எதிர்க்கட்சி” – அண்ணாமலை கருத்து
> அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக கடுமையான துப்பாக்கிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில், கொலம்பியா மேயர் முரியல் பவுசர் பேசுகையில், பொறுத்தது போதும், நமது குழந்தைகளை துப்பாக்கி வன்முறையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்கான பணியை நாடாளுமன்றம் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். | விரிவாக வாசிக்க > அமெரிக்கா | துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக மக்கள் பேரணி
> கடந்த 17 மாதங்களில் 10 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ளார், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். இதே காலகட்டத்தில் ஒரே ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் உள்ளனர் ஸ்மித், விராட் கோலி மற்றும் வில்லியம்சன். விராட் கோலி, கடந்த 2019 நவம்பர் வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்தார். அதன் பிறகு இதுவரையில் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் கோலி சதம் பதிவு செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. | விரிவாக வாசிக்க > 17 மாதங்களில் 10 டெஸ்ட் சதங்களை விளாசிய ரூட்: ஒரு சதம் கூட பதிவு செய்யாத கோலி, ஸ்மித், வில்லியம்சன்
> அஜித், விஜய் படங்களை வசூலில் முறியடித்து கமலின் ‘விக்ரம்’ படம் சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘விக்ரம்’ படம், வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவந்த நிலையில், இந்தப் படம் அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. நடப்பாண்டில் வெளியான படங்களில் ‘வலிமை’ 200 கோடி ரூபாயும், ‘பீஸ்ட்’ 150 கோடி ரூபாயும் வசூலித்திருந்த நிலையில், கமலின் ‘விக்ரம்’ படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. | விரிவாக வாசிக்க > அஜித், விஜய் படங்களின் வசூல் சாதனையை முறியடித்த கமலின் ‘விக்ரம்’