நேஷன் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்னும் சற்று நேரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போலீஸாரை சிலரை கைது செய்துள்ளனர்.
சத்தியாகிரக யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். முன்னதாக நேற்றே காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்த காவல்துறை தடை உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இன்று காலையிலேயே ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸார் போராட்டங்களை தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால் ஆங்காங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஜக விமர்சனம்: இந்தப் போராட்டத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜகவின் சம்பத் பித்ரா இது குறித்து, ”எதற்கு இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாடகம். அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டியது தானே. இது என்ன வகையான சத்தியாகிரகம். மகாத்மா காந்தி இருந்திருந்தால் இந்த போலி சத்தியாகிரகத்தைப் பார்த்து வருந்தியிருப்பார். இதில் காங்கிரஸ் அரசியல் செய்வதற்கு ஏதுமில்லை. இந்தப் பிரச்சினை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்தது” என்று கூறியிருந்தார்.
நேஷன் ஹெரால்டு வழக்குப் பின்னணி: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.
இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது.
இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய தில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.