புதுடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் ரோஹித் ஜோஷியால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், தனது தாயுடன் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் மை வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் 23 வயது இளம்பெண் கடந்த மே 8ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அதில், ‘ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை வெவ்வேறு நிகழ்வுகளில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதையடுத்து டெல்லி போலீசார் அமைச்சரின் மகன் ரோஹித் ஜோஷி மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், டெல்லியின் காளிந்தி குஞ்ச் சாலை அருகே தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த இருவர் திடீரென அந்த பெண்ணின் மீது எதையோ வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது மகளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார். தகவலறிந்த போலீசாரும், பாதிக்கப்பட்ட ெபண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் டிசிபி (தென்கிழக்கு) ஈஷா பாண்டே கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நீல நிற மை வீசப்பப்பட்டதாக தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக புதியதாக வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை அடையாளம் காண, அப்பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்’ என்றார்.