வாஷிங்டன்,
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு முறையே கதவை தட்டும் என கூறுவது உண்டு. ஆனால், நம்மூரில் மட்டுமே இதுபோன்ற பழமொழிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் ஸ்பிரிங் வேலி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பெண் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி) உச்சபட்ச பரிசு தொகை கிடைத்திருக்கிறது.
அந்த பெண்ணுக்கு பரிசு விழுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020ம் ஆண்டு இதே கடையில், விற்பனை செய்யும் இதே நபர்களிடம் அவர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.
அதில் அவருக்கு, 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.9 கோடி) அளவுக்கு பரிசு தொகை கிடைத்தது. இதுபற்றி அவர் கூறும்போது, முதல் முறை பரிசு கிடைத்தபோது, அதனை வைத்து வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாக இருந்தேன். இந்த முறை நான் வீடு ஒன்று வாங்க போகிறேன் என கூறியுள்ளார்.
முதல் முறை கிடைத்த பரிசு தொகையை கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடிவு செய்த அவருக்கு, 2வது முறை கிடைத்த பரிசை திட்டமிடலுடன் செலவிட வேண்டும் என தோன்றியுள்ளது ஏனோ? தெரியவில்லை.
கடந்த மாதம், தெற்கு கரோலினாவில் காலையில் காபி போட பால் இல்லை என்பதற்காக, ஓடி சென்று பால் வாங்கிய நபர் ஒருவர், விருப்பமின்றி வாங்கிய லாட்டரி சீட்டில் ரூ.15 கோடிக்கு பரிசு கிடைத்த சம்பவமும் நடந்துள்ளது.