வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி விநாயகபுரம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த காரில் பயணம் செய்த 60 வயது கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.