பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தமிழக அரசு தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனவே, ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் பொருட்டு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணை வேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே முதல்வரை வேந்தராக கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கும் மசோதாவும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் முதல்வரே பொறுப்பு வகிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது. கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்கள் மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். ஆனால், தமிழ்நாடு உள்பட மேற்கண்ட மாநிலங்களில் வேந்தராக ஆளுநர்களே இருக்கும் நிலையில், மேற்குவங்கத்தில் வேந்தராக முதல்வரே இருக்கும் வகையில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.