நியூ மெக்சிக்கோ: வரும் புதன்கிழமை முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெறுகிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் 1995 வாக்கில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகில் பரவலான மக்கள் கணினி பயன்பாட்டை தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் துணை கொண்டே பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணையவெளியில் தேடி, தெரிந்துகொண்டனர். படிப்படியாக பல்வேறு அப்டேட்களை கண்டது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். கடைசியாக கடந்த 2013 வாக்கில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11-வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பது.
அதன் பிறகு விண்டோஸ் 10 வரவு காரணாமாக 2015 வாக்கில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடுத்த வெர்ஷனுக்கான அப்டேட்டை அப்படியே நிறுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல எட்ஜ் பிரவுசரை பயனர்கள் மத்தியில் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. விண்டோஸ் 11-இல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை ஸ்டார்ட் மெனுவில் இருந்தே தூக்கியிருந்தது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விடவும் வேகமான, அதிக பாதுகாப்பான மற்றும் நவீன பிரவுசர் அனுபவத்தை எட்ஜ் பிரவுசர் வழங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 வெர்ஷன் குறிப்பிட்ட சில விண்டோஸ் 10 கணினிகளில் சப்போர்ட் ஆகாது என பிளாக் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ் என பல்வேறு பிரவுசர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கடுமையான சவாலை கொடுத்தன. அதன் காரணமாக எட்ஜ் பிரவுசரை அறிமுகம் செய்தது மைக்ரோசாஃப்ட்.