6 மணிநேரத்தில் 24 முட்டை போட்ட அதிசய கோழி: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் பிஜுகுமார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாங்கி வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி பிஜுகுமாரின் மகளை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அந்த கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் சின்னு கோழி நேற்று ஒரு அதிசய சம்பவத்தை நிகழ்த்தியது. அதன்படி நேற்று காலை தனது காலை சற்று தூக்கி தூக்கி நடந்து கொண்டிருந்தது. ஏதாவது அடிபட்டிருக்கலாம் என்று கருதி பிஜுகுமார் கோழியின் காலில் தைலத்தை தடவி உள்ளார். பின்னர் காலை சுமார் 8.30 மணி அளவில் கோழி ஒரு முட்டை போட்டது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து முட்டைகளை போடத் தொடங்கியது. இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியினர் ஏராளமானோர் அதிசய கோழியை பார்ப்பதற்காக அங்கு திரண்டனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே சின்னு கோழி வரிசையாக முட்டைகளை போட்டுக் கொண்டிருந்தது. காலை சுமார் 8.30 மணிக்கு முட்டை போடத் தொடங்கிய கோழி, பிற்பகல் 2.30 மணிக்குத் தான் முட்டை போடுவதை நிறுத்தியது. இந்த 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகளை போட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து அதிசய கோழியை பார்ப்பதற்காக ஊர் மக்கள் பிஜுகுமார் வீட்டில் திரண்டனர். இதுகுறித்து திருச்சூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வினோத் கூறுகையில், ஒரு கோழி 6 மணிநேரத்தில் 24 முட்டைகளை போடுவது என்பது மிகவும் அதிசயமான சம்பவமாகும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த பிறகே என்ன காரணம் என்பது குறித்து கூறமுடியும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.