தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவின் போது, பக்தர்களால் இழுத்து வரப்பட்ட சப்பரம் சரிந்து விழுந்ததில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நாளான இன்று, தேர் (சப்பரம்) ஊர்வலம் நடைபெற்றது. அப்போது வயல்வெளி பாதை வழியாக அந்த தேர் வந்து கொண்டிருக்கும்போது, திடீரென தேரின் அச்சாணி முறிந்து தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது.
தேரின் ஓரத்தில் வந்து கொண்டிருந்த 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் மனோகரன், சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.