கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு நேரடியாக வழங்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்ற குழு, மின் வாரிய தலைவர் பெர்டினான்டோவை அழைத்து விசாரித்தது.
‘‘காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழுத்தம் தந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச என்னிடம் கூறினார்’’ என்று பெர்டினான்டோ விளக்கம் அளித்தார். இந்த குற்றச்சாட்டை அதிபர் கோத்தபய திட்டவட்டமாக மறுத்தார். இதைத் தொடர்ந்து பெர்டினான்டோ தனது கருத்தை வாபஸ் பெற்றார். மனஅழுத்தம் காரணமாக பொய் கூறிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் பதவியையும் ராஜினாமா செய்தார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச கூறும்போது, “யாரோ ஒருவருடைய அழுத்தத்துக்கு அடிபணிந்து பெர்டினான்டோ தனது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளார். அவர் மீது வழக்கு தொடருவேன்” என்றார்.