சென்னை: வரும் ஜூன் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: “அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்ஜிஆர் மாளிகை, தலைமைக் கழகக் கூட்டரங்கில், இன்று (ஜூன் 14) செவ்வாய்க்கிழமை தலைமைக் கழக நிர்வாகிககள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 23.6.2022 அன்று நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும், என்னென்ன தீர்மானங்களைக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.