புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று (ஜூன் 14) அவர் 2-வது நாளாக ஆஜராகியுள்ளார்.
2வது நாளாக நீடித்த போராட்டம்: முன்னதாக காங்கிரஸ் தலைமையகத்துக்கு ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் வந்தனர். அப்போது அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கோஷம் எழுப்பினர். கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் அங்கு திரண்டிருந்தனர்.
ஹரீஷ் ராவத், ரன்தீப் சிங் சூரஜ்வாலா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் அமலாக்கத் துறை அலுலவகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தனர். சிலர் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றப்பட்டனர். கிராண்ட் ஓல்ட் அக்பர் சாலை முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காரில் வந்த காங்கிரஸ் தொண்டர்கள், பிரமுகர்கள் என அனைவருமே கட்சி அலுவலகம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனித்தனி வாகனத்தில் ஒரு நபராக சென்றாலும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 10 மணி நேரம் விசாரணை: முதல் நாள் விசாரணையில் ஆஜரான ராகுல் காந்தியிடம் நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 25 கேள்விகள் கேட்கப்பட்டன. அத்தனைக்கு சொந்த கையெழுத்தில் பதில் எழுதி வாங்கப்பட்டன. இன்றும் இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது
இந்நிலையில், “ராகுல் காந்தி மத்திய அரசை பல்வேறு கேள்விகள் கேட்கிறார். சீன ஆக்கிரமிப்பு, உயரும் பண வீக்கம், பெருந்தொற்று, ஊரடங்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை, விவசாயிகள் போராட்டம், மத வன்முறைகள் என அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். அதனால் பாஜகவுக்கு அவர் மீது அச்சம். அந்த அச்சத்தால் அவரை குறிவைத்து வழக்குகளை ஏவுகிறது” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா விமர்சித்துள்ளார்.
வழக்கு பின்னணி: அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் (ஏஜேஎல்) என்பது, நாட்டின் விடுதலைக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
பின்னர் 2010-ம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, பங்கு பரிமாற்ற விவகாரத்தில் அந்நியச் செலாவணி மோசடி நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கப் பிரிவும் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது.