புதுடில்லி : மின்னணு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்திற்கு, தேசிய நிறுவன சட்ட வாரியம், 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.அமேசான் இந்தியா நிறுவனம், அதன் வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், பியூச்சர் குழுமத்தைச் சேர்ந்த பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின், 49 சதவீத பங்குகளை வாங்க, சந்தை வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில், அமேசான் சில தகவல்களை மறைத்ததாக குற்றம்சாட்டி, பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, ஆணையம் தடை விதித்தது. அத்துடன், 200 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து, அமேசான் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட வாரியத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சட்ட வாரியம், சந்தை வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையத்தின் முடிவு சரியானதே எனக் கூறி, அமேசான் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், ஆணையம் ஏற்கனவே விதித்த, 200 கோடி ரூபாய் அபராதத்தை, 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இது, அமேசானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Advertisement