சத்தியமங்கலம் அருகே ஆடு திருட முயன்ற நபரை பொதுமக்கள் முன்னிலையில் அவரை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை, கடந்த ஜூன் இரண்டாம் தேதி திருப்பூர் மாவட்டம் கொட்டகாட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருட முயன்றனர். அங்கிருந்த மக்கள் அந்த கும்பலைச் சேர்ந்த, குமார் என்பவரை பிடித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை, பொதுமக்கள் பிடித்துச் செல்லும்போது, புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன், ஆத்திரத்தில் ஆடு திருட முயன்ற குமாரை காலால் தாக்கியுள்ளார். இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
தற்போது இந்த வீடியோ வைரலானதால் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆடு திருட முயன்ற நபரை காலால் எட்டி உதைத்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் : டி.சாம்ராஜ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM