புதுடெல்லி: இந்தியாவில் காற்று மாசு குறித்து, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்றின் தர வாழ்க்கையின் எரிசக்தி கொள்கை நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகிலேயே மிகவும் காற்று மாசுபாடுள்ள மெகா நகரமாக டெல்லி உள்ளது. இங்கு உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை விட 21 மடங்கு காற்று மாசுபாடு அதிகமாகும். தற்போதைய காற்று மாசு அளவு தொடர்ந்தால், டெல்லிவாசிகள் 10 வருட ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் சராசரி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டு ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். இந்தியா அதிக துகள் மாசு செறிவு மற்றும் அதிக மக்கள்தொகை காரணமாக காற்று மாசுபாட்டின் அதிக சுகாதார சுமையை எதிர்கொள்கிறது. 2013 முதல், உலகின் மாசு அதிகரிப்பில் சுமார் 44 சதவீதம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது, அங்கு துகள் மாசு அளவு ஒரு கன மீட்டருக்கு 53 மைக்ரோகிராமில் இருந்து 56 மைக்ரோகிராம் வரை அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை விட தோராயமாக 11 மடங்கு அதிகம். 1998ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் சராசரி ஆண்டு துகள் மாசுபாடு 61.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது சராசரி ஆயுட்காலம் 2.1 ஆண்டுகள் மேலும் குறைக்க வழிவகுத்தது.கடந்த இரண்டு தசாப்தங்களாக தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை இந்தியாவில் காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு காரணம். இந்தியாவின் 130 கோடி மக்கள் அனைவரும் ஆண்டு சராசரி துகள் மாசு அளவு உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை மீறும் பகுதிகளில் வாழ்கின்றனர். 63 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், நாட்டின் சொந்த தேசிய காற்றின் தரமான ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம்களை தாண்டிய பகுதிகளில் வாழ்கின்றனர்.