யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட போதும் கூட தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் பலாலி விமான நிலையத்தை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்பனை பார்வையிட விமான சேவைகள் அமைச்சர் விரைவில் பலாலி வருவதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை தேவையானளவு பெறலாம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த போக்குவரத்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இதனூடாக மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.