பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் வாங்க பாகிஸ்தான் அரசு காத்திருக்கிறது.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறியதாவது:
பெட்ரோலிய பொருள்ட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. இலங்கையும் இதேபோல் தான் பொது மக்களுக்கு மானியம் வழங்கியது. தற்போது இலங்கை திவாலாகி விட்டது. பெட்ரோல், மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு திவால் நிலைக்கு தள்ளப்படும்.
உக்ரைனில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்… பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை ரத்து செய்து விலையை உயர்த்தவில்லையென்றால் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்காது. இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடு அழிவை நோக்கி செல்லும். கடுமையான முடிவுகளை எடுங்கள் என்று பிரதமரிடம் நான் கூறினேன்.
ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை பிரதமர் விரும்பவில்லை. இலங்கை இன்று அதிக விலைக்கு எரிபொருளை வாங்குகிறது. மக்களுக்கு மருந்துப்பொருட்கள் வாங்கவும் அந்நாட்டில் பணம் இல்லை. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.