புதுடெல்லி: உலக அளவில் யோகா பிரம்மாண்டமாக பிரபலம் அடைந்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வரும் 21-ம் தேதி மைசூர் அரண்மனையில் நடக்கும் யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
யோகா நன்மைகளைத் தரும்
யோகா தினம் நெருங்குவதை முன்னிட்டு யோகா கலையின் நன்மைகள் குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
யோகா பயிற்சி எண்ணற்ற நன்மைகளைத் தரும் என்றும் அன்றாட வாழ்க் கையில் எல்லோரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்றும் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டு ஐ.நா. சபைக் கூட்டத்தில் யோகா பயிற்சி பற்றி அவர் பேசியதன் வீடியோ, யோகா பயிற்சியால் ஏற்படும் பலன்கள், பல்வேறு யோகாசன செய்முறைகள் குறித்த வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘‘கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் யோகா கலை பிரம்மாண்டமாக பிரபல மடைந்துள்ளது. தலைவர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் தினமும் யோகா பயிற்சி செய்வதோடு, தங்களுக்கு அது எப்படி உதவு கிறது என்றும் கூறுகின்றனர்’’ என்று மோடி பதிவிட்டுள்ளார்.