பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் நாடு முழுவதும் கடும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேச மாநில அரசு, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. அங்கு சட்டவிரோதமாக தடுப்புக் காவல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடிப்பது, போராட்டகாரர்களுக்கு எதிராக காவல் துறையின் அடக்குமுறை ஆகியவை அரங்கேறி வருகின்றன..
உத்தரப் பிரதேச அரசின் இந்த கண்டிக்கதக்க இந்த நடவடிக்கைகளை, தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, வி. கோபால கவுடா, ஏ.கே. கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ பி ஷா, முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு, உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை எழுதி தலைமை நீதிபதிக்கு அனுப்பி உள்ளனர்.
அதில், ‘முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களின் விளைவாக நாட்டில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில அரசே வன்முறை நடவடிக்கைகளை எடுக்க அனுமதித்துள்ளது.
மாநில அரசு கொடுத்துள்ளை தைரியத்தால் போலீஸ் காவலில் இருக்கும் இளைஞர்கள் லத்தியால் தாக்கப்படுவது, போராட்டக்காரர்களின் வீடுகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படுவது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டி அடிப்பது போன்ற சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோக்கள் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளன.
இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் நீதித் துறையின் திறமை சோதிக்கப்படுவதாகவும், கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம், பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் ஆகியவற்றில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்ததை போன்று, இந்த விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.