சென்னை: ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் “எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இது குறித்து இன்று காலை பேட்டியளித்த மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படவில்லை. எனவே ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் விவகாரத்தில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், இது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை தமிழக பாஜக வெளியிட்டது.
அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியைப் பார்த்தோம். தமிழக பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக பாஜக அளித்த புகாரையும் திமுக அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும், ஆவின் ஹெல்த் மிக்ஸ் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.
கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை.
கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை @BJP4TamilNadu வெளியிட்டது.
— K.Annamalai (@annamalai_k) June 14, 2022