முகமது நபிகள் குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் இருவர் தெரிவித்த கருத்தால் உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமையன்று வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசியல் ஆர்வலரும், சமுக செயல்பாட்டாளருமான முகமது ஜாவேத் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறைக்குப் பின்னால் சதி செய்தவர்களில் ஒருவர் என்று கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து முகமது ஜாவேத் வீட்டை பி.டி.ஏ மூலம் வரைபடத்தைப் பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது எனக் கூறி உத்தரப்பிரதேச அரசு இடித்தது. இந்த சம்பவத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், வீடு இடிக்கப்பட்டது தொடர்பாகப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “உத்தரப்பிரதேச அரசு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கிறது. புல்டோசர்களை அச்சத்தையும், பயங்கரமான சூழலை உருவாக்கவும், அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
வீடுகள் இடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த குடும்பமும் குறிவைக்கப்படும் தவறான நடவடிக்கையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். விதிகளையும் சட்டங்களையும் பணயத்தில் வைத்து, அரசு புல்டோசரைப் பயன்படுத்திக் குடியிருக்கும் வீட்டை இடிக்கும் அவசர நடவடிக்கை, அப்பாவி குடும்பங்களையும், அப்பாவி மக்களையும் பாதிக்கிறது.
நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துகள்தான் வன்முறையைத் தூண்டுவதற்கு வழிவகுத்த பிரச்னையின் மூல காரணம். அவர்களின் மோசமான கருத்துகளால் நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு ஏன் சட்டத்தைக் கேலி செய்கிறது? குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சிறைக்கு அனுப்பாதது அடாவடித்தம் மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.