அடுத்த வருடத்திற்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை காகிதத்தை இறக்குமதி செய்வதாகவும் உள்நாட்டில் காகிதத்தை உற்பத்தி செய்வதில்லை எனவும் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் இதற்கு முன்னர் உற்பத்தி இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இந்த வருடத்திற்கு தேவையான வளங்கள் போதுமானது எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை
பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், தேர்வுத் தாள்கள் மற்றும் பிற தேவைகளுக்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அமைச்சகத்திற்கு காகிதம், அச்சுப் பொருட்கள் மற்றும் மை தேவை என்று கூறினார்.
இந்த மதிப்பீடுகள் திறைசேரி, வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியின் கீழ் 65 மில்லியன் அமெரிக்க டொலலர்களை அமைச்சகம் பெறும் என்றும், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் இருந்து தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் கூறிய அமைச்சர், இதற்கு முன்பும் தமிழ்நாட்டிலிருந்து காகிதப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
டிப்போக்களில் பாடசாலை வான் மற்றும் பேருந்துகளுக்கு எரிபொருள்
இலங்கை போக்குவரத்து சபையினால் நடத்தப்படும் டிப்போக்கள் ஊடாக பாடசாலை பேருந்துகள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவருடன் தொலைபேசியில் பேசி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் கூறினார்.
எரிபொருள் நெருக்கடியினால் வான் சாரதிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்ட இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மாத்திரமே பாடசாலை பேருந்துகள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் வழங்குவதாக தெரிவித்தார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயத்தை முன்வைத்ததாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் பாடசாலை வான் மற்றும் பேருந்து நடத்துனர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சர்கள் அனுமதியளித்தனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.