காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், ”காவல்துறை புகார் ஆணையம்” சீரமைக்கப்படவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான அக்கட்சியின் செய்திக்குறிப்பில், “விசாரணைக்கைதிகளை நடத்த வேண்டிய விதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், லாக்அப் மரணங்கள் தொடர்வது கொடுமையானது.
குற்றவாளியே என்றாலும் தண்டிக்கவேண்டியது நீதித்துறைதான்,காவல்துறையல்ல என்ற எளியோனுக்கும் தெரிந்த சட்டமுறையை காவல்துறை கடைபிடிக்காமல் முரண்டு பிடிப்பது கண்டனத்துக்கு உரியது.
காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர், காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளிவைப்பதற்கான உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்திட வேண்டும். காவல்நிலையத்தில் நீதி மறுக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவேண்டும்.
காவல்நிலையங்களில் மக்களுக்கு நீதி கிடைத்திட, மக்கள் நீதி மய்யம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கோரியபடி ”தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013ல்” உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாகவுள்ள பிரிவுகள் சீரமைக்கப்பட்டு “காவல்துறை புகார் ஆணையமானது” வலுவாக்கப்படவேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.