குடிபோதையில் அடிக்க வந்த அப்பாவுக்கு பயந்து தோட்டத்துக்குள் ஓடிய 4 வயது பெண் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேந்திரன்.
இவர் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பயந்து அருகில் இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் குழந்தைகள் ஓடிய நிலையில் 4 வயதான சுஷ்விஷாவை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தை அழுதுகொண்டே கூறியதால் அக்கம்பக்கத்தினர் சுஷ்விஷாவை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் சுஷ்விஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 4 வயதான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.