“குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியில் தான் இல்லை” என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2ம் தேதி சரிபார்க்கப்படுகிறது.
நோ சொன்ன சரத், நிதிஷ்: இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனக்கு விருப்பமில்லை என்று புறந்தள்ளிவிட்டார்.
அதேபோல் நிதிஷ் குமாரின் பெயரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அடிபட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான ஷ்ரவன் குமார், “நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் அனைத்து தகுதியும் படைத்தவர் நிதிஷ் குமார். அவர் குடியரசுத் தலைவராவதை எல்லோருமே விரும்புவார்கள். ஒரு பிஹாரி குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரால் இந்த பொறுப்பை தனது தோள்களில் சுமக்க முடியும்” எனக் கூறியிருந்தார்.
ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடக்கூடும் என்று வெளியான தகவலை நிதிஷ் குமார் மறுத்துள்ளார். “நான் குடியரசுத் தேர்தல் போட்டியில் இல்லை. நான் பிஹாரைவிட்டு எங்கும் போகப்போவதும் இல்லை. இதுபோன்ற தகவல்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை” என்று அவர் தெரிவித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
காங்கிரஸ் சம்மதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் பங்கேற்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சரத் பவாரையே பொது வேட்பாளராக நிறுத்த ஆதரவு தெரிவிப்பதால் இந்த ஆலோசனைக் கூட்டம் கவனம் பெறுகிறது.
பாஜகவுக்கே வாய்ப்பு அதிகம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,706 ஆக உள்ளது. அதாவது 49 சதவிகித வாக்குகள் உள்ளன. 51 சதவீதத்தை எட்டிப்பிடிக்க 13 ஆயிரம் வாக்கு மதிப்புகள் தேவை.
அதேசமயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவிகித வாக்குகள் உள்ளன. எனவே ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது.