வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுடெல்லி வந்த சரத் பவாரை இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரியும் டி ராஜாவும் சந்தித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டு வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையேயான ஆலோசனை செவ்வாய்க்கிழமை வேகமெடுத்துள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை முக்கியமானது என்பதால், புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக இடதுசாரி தலைவர்களிடம் சரத் பவார் கூறினார்.
“குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று எங்களிடம் கூறினார். அதையே நாளைய கூட்டத்தில் வெளிப்படையாக கூறுவார். மற்ற வேட்பாளர்களின் சாத்தியக்கூறுகளை நாம் ஆராய வேண்டும்” என்று டி. ராஜா indianexpress.com இடம் கூறினார். இந்தக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் கலந்து கொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
புதன்கிழமை நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டு கூட்டத்திற்கு முன்னதாக, தலைநகர் டெல்லி வந்தடைந்த மம்தா பானர்ஜி, சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த கூட்டத்தில் என்.சி.பி ராஜ்யசபா எம்பி பிரபுல் படேலும் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திமுக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலுவை நியமித்துள்ளது. அன்றைய தினம் இடதுசாரி தலைவர்கள் டி.ஆர். பாலுவை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மம்தா பானர்ஜி தன்னிச்சையாக இந்த கூட்டத்தை கூட்டுவது காங்கிரஸையும் இடதுசாரிகளையும் ஈர்க்கவில்லை. ஆனால், இந்த கட்சிகளின் வட்டாரங்கள் திங்கள்கிழமை எதிர்க்கட்சி முகாமில் பிளவு உள்ளதை தெரிவிப்பதைத் தவிர்க்க கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“