புதுடெல்லி: நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்து விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து 7,100 கணக்கு மூலம் வெறுப்பு பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து குறித்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட பெயரில் வெளியாகும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய பெரும்பாலான பயனர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘சர்ச்சை கருத்து தொடர்பாக குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை பயன்படுத்திய 60,000க்கும் மேற்பட்ட சமூக ஊடக பயனர்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து 60,020 சரிபார்க்கப்படாத கணக்குகளில் கருத்துகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 7,100 கணக்குகளின் பதிவுகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக கருத்துகள் பதிவாகி உள்ளன. ஓமன் நாடு, இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பதாக அறிவித்ததாக பாகிஸ்தான் ஆரி நியூஸ் உட்பட பல ஊடக நிறுவனங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன. கிரிக்கெட் வீரர் மொயின் அலியின் பெயரில் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் அதிகமாக இருந்தன. பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல், பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நவீன் ஜிண்டாலின் சகோதரர் என்றும் பொய்யாக பதிவிட்டுள்ளனர். போலியான ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் வைரலாக்கப்பட்டது. இதில் சிலர் காஷ்மீர் பிரச்னையும் இழுத்து கருத்துகளை பதிவு செய்துள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.