புதுடெல்லி: பள்ளிக் குழந்தைகள் அதிக பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது அமைச்சர் மாண்டவியா பேசியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விழிப்புடன் இருப்பது அவசியம். பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். முதியோருக்கான பூஸ்டர் தடுப்பூசியும் அதிகம் செலுத்தப்பட வேண்டும்.
கரோனா வைரஸ் மரபணு பரிசோதனையை வலுப்படுத்த வேண்டும். பரிசோதனை அதிகரிப்பதன் மூலமும் உரிய நேரத்தில்செய்வதன் மூலமும் நோய் தொற்றை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். இதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, முன்னெச்சரிக்கை விதிகள் என்ற 5 அம்ச உத்தி தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சர்வதேச பயணிகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தகூடிய புதிய கண்காணிப்பு உத்தியை மாநிலங்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதிதாக 8,084 பேருக்கு கரோனா
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,32,30,101 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 5,24,771 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய நாளை விட 3,482 உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் விகிதம் 0.11 சதவீதமாக உள்ளது.
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,57,335 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 3.24 சதவீதமாகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 2.21 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 193.53 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 13.81 கோடி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் உள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.