`தினமும் நீராட வேண்டும்’ என அறிவுறுத்தப்படுகிறது. என்றாலும், பெரும்பாலானோர் அரைகுறையான `காக்கா குளிய’லைத்தான் மேற்கொள்கிறோம். உடலின் சுத்தத்தைப் பராமரிப்பதில் குளியலுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
குளிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்த, ஆண்டுதோறும் ‘சர்வதேச குளியல் தினம்’ ஜூன் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
5 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அதிகாலையில் குளிப்பது சிறந்தது.
குளிப்பதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை ஒதுக்கி, முதுகு முதல் கால்விரல் இடுக்குகள் வரை சோப்பை உடல் முழுதும் தேய்த்து, அழுக்குப் போக குளிக்க வேண்டும்.
காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குளிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகம் வியர்வை சுரக்கும் இடங்கள், கை, கால்களில் அழுக்கு சேரும் மடிப்புகள், நகங்கள், பாதங்கள் என நன்றாகத் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
வெயில் காலத்தில் மட்டுமல்லாமல் பொதுவாகவே குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை தரும்.
மழை, பனி காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். எப்போதும் அதிகம் கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
வாரம் இரண்டு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்துக் குளிப்பது நல்லது.
குளிக்கத் தொடங்கும் போது பாதத்தில் ஆரம்பித்து இறுதியாக தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். எடுத்த உடன் தலையில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்கலாம்.
சளி, சைனஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பதை தவிர்க்கலாம்.
இரவில் குளிப்பது ‘ராக்ஷஸ ஸ்நானம்’ எனப்படும். இது உடலுக்கு தீங்கு என்பதால், இரவு 8 மணிக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.