மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.
மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான்நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாகக் காட்சித் தருகிறார். பிரசித்திபெற்ற இக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லோகநாயகித் தாயாருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி ஐந்துமுறை சுற்றிவந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பல்வேறு காரணங்களால் கடந்த 16 ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த இந்தத் தெப்பத் திருவிழா இந்தாண்டு நடைபெற்றதால் இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.