சேலம் அருகே காட்டுக்குள் சுருக்கு வைத்து கொள்ளை கும்பல் மாடுகளை பிடித்துச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க போலீசார் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (49). இவர் அப்பகுதியில் உள்ள சுகந்தி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதோடு 20க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், தினந்தோறும் மாடுகளை அருகில் உள்ள பனமரத்துப்பட்டி ஏரி மற்றும் அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளிலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு கொண்டு செல்லும்போது பனமரத்துப்பட்டி ஏரியில் சிலர் மாடுகளுக்கு சுருக்கு கயிறு வைத்து பிடித்து திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் ஒரு மாட்டை கன்னியில் சிக்கவைத்து பிடித்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து திப்பம்பட்டி, மூலக்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் திருடிச் சென்ற தெரியவந்தது.
இது தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல்நிலைய போலீசாரை அழைத்துச் சென்று கணேசனிடம் கேட்டபோது அவர், பெரியண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொடுத்த புகாரின்மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மாடுகள் திருடு போயிருக்காது என்று பெரியண்ணன் கூறினார். இதுவரை 20க்கும் மேற்பட்ட மாடுகள் திருடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக பெரியண்ணன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM