புதுடெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சைடஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான பங்கஜ் ஆர்.படேலை, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் பகுதி நேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குநராக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நியமித்துள்ளது.
இவர் 4 ஆண்டுகள் இந்த புதிய பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படேல் தற்போது உதய்பூரில் உள்ள (ஐஐஎம்)இந்திய மேலாண்மை நிறுவனத்தின் கவர்னர்கள் மற்றும் சங்கத்தின் தலைவராக உள்ளார். மேலும், அகமதாபாத்தில் ஐஐஎம்-இன் கவர்னர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட படேல், குஜராத் புற்றுநோய் சங்கத்தின் செயல் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அறங்காவலர் ஆவார். இன்வெஸ்ட் இந்தியா, மிஷன் ஸ்டீயரிங் குரூப் (எம் எஸ் ஜி) மற்றும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் உட்பட பல நிறுவனங்களில் உறுப்பினராகவும் உள்ளார்.
முன்னதாக, 2016-17 காலகட்டத்தில் பங்கஜ் படேல், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (எப் ஐ சி சி ஐ) தலைவராகவும் இருந்தார். இந்தியாவில் கேன்சர் நோய்க்கான முன்னணி மருத்துவமனையாக திகழும் குஜராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.