புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொது வேட்பாளரை முடிவு செய்வதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. இதையொட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசி உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் 16வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுதொடர்பாக உட்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ஆதரவை திரட்ட ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக, முக்கிய ஆலோசனை நடத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 11ம் தேதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத்பவாரை நிறுத்த பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என சரத்பவார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மம்தா அழைப்பின் பேரில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை முடிவு செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது. இதில், திமுக சார்பில் கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் பங்கேற்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளன. ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற பிற எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, நேற்று டெல்லி வந்த மம்தா பானர்ஜி, டெல்லியில் உள்ள சரத் பவார் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சரத் பவாருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளன. மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரும் சரத்பவாரை சந்தித்து பேசி உள்ளனர். இதனால், இன்றைய கூட்டத்தில் சரத்பவார் பொது வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவது முக்கியமான விஷயமாகும். இது காலத்தின் அவசியம் என்றும் மம்தா வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.