டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தில் போலீஸ் தாக்கியதில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்தது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறை அலுவலக முற்றுகை போராட்டம் மேற்கொண்ட நிலையில், வழிநெடுக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மோடி அரசு பழிவாங்கல் நடவடிக்கையாக, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியாக மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவிவிடுகிறது என்றும், இது கோழைத்தனமான செயல் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. முன்னதாக, முற்றுகை போராட்டத்தை டெல்லி போலீஸார் தடுக்கும்போது தாக்கப்பட்டதில் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் விலா எலும்பு முறிந்தது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சிதம்பரத்தின் இடது விலா எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். சிதம்பரத்தின் கண்ணாடிகளும் தரையில் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து எல்லைகளையும் மோடி அரசு மீறியுள்ளது.
காவல்துறையினரின் தாக்குதலில் ப.சிதம்பரம் தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்ணாடிகள் தரையில் வீசப்பட்டன. போலீஸ் தாக்கியதில் சிதம்பரத்தின் இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. எம்பி பிரமோத் திவாரி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதுதான் ஜனநாயகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.